Sunday, April 19, 2015

அரிச்சந்திரன் கதை - 1. திரிசங்கு சொர்க்கம்


நீதிநெறியுடன் ஆட்சிபுரிந்து வந்த திரிசங்கு மன்னன் தனக்கு முதுமை ஏற்ப்பட்டுவிட்டதகக் கருதினான். சகல புண்ணியங்களையும் செய்தவன் சொர்க்க போகம் அனுபவிப்பான் என்று அவனது தந்தையான அருணன் அடிக்கடி கூறுவது அவனது நினைவிற்கு வந்தது.
உடம்போடு சொர்க்கம் செல்ல வேண்டுமென்ற ஆசை திரிசங்கு மன்னனுக்கு ஏற்பட்டது. இதுவரை யாருமே அடையாத ஆசை இது. ஒரு நன்னாளில் தனது மைந்தன் அரிச்சந்திரனுக்கு முடிசூட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தான்.
அரச பொறுப்பிலிருந்து விடுபட்ட திரிசங்கு நேராக வனத்திற்குச் சென்றான். அங்கு தனது குலகுருவான வசிஷ்ட முனிவரைச் சந்தித்தான். உடம்போடு சொர்க்கம் செல்லும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவனது விசித்திரமான ஆசை முனிவருக்கு வியப்பை அளித்தது.
அவர் சிரித்துக்கொண்டே "திரிசங்குவே! இது நடக்ககூடிய காரியமல்ல. பூலோகத்தில் பிறந்த எவரும் உடம்போடு சொர்க்கம் செல்வது என்பது முடியவே முடியாது" என்று கூறிவிட்டார்.
இருப்பினும் திரிசங்கு தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான். அவன் மேலும் பல தவயோகிகளைச் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தான். அவர்களும் அது நிறைவேற முடியாத ஆசை என்று கூறிவிட்டனர்.
இறுதியாக விசுவாமித்திர முனிவரைச் சந்தித்தான். அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். திரிசங்கு தனது விருப்பத்தை தெரிவித்தான். மற்ற முனிவர்கள் கூறியவற்றையும் முனிவரிடம்  தெரிவித்தான்.
வசிஷ்ட முனிவரே திரிசங்குவின் விருப்பத்தை வீண் கனவு என்று கூரிவிட்டதை விசுவாமித்திரர் எண்ணிப் பார்த்தார். அவரால் முடியாததைத் தான் செய்து காட்ட வேண்டும் என்று முடிவிற்கு வந்தார்.  தன் தவ வலிமையால் திரிசங்குவை உடம்போடு சொர்கத்திற்கு அனுப்புவதாக வாக்களித்தார்.
திரிசங்குவிடம் தனது விருப்ப தெய்வத்தை மனதில் நிணைதுக்கொண்டு கரம் குவித்து வணங்கி நிற்குமாறு விசுவாமித்திரர் கூறினார். திரிசங்குவும் அவ்வாறே வணங்கி நின்றான். விசுவாமித்திரர் இதுவரை தான் செய்த தவங்களின் பயன்கள் யாவற்றையும் திரிசங்குவிற்கு அர்பணித்து "சொர்க்கம் செல்க" என்றார்.
உடனே திரிசங்கு வானவீதியை நோக்கி கிளம்பினான். சொர்க்க வாயிலை அவன் நெருங்கும்போது தேவலோக வேந்தன் இந்திரன் மனித உடம்புடன் திரிசங்கு வருவதைக் கண்டு கோபம் அடைந்தான். தன்னுடைய வச்சிராயுதத்தால் அவனைத் தாக்கினான்.
அடி தாங்க முடியாமல் திரிசங்கு அலறிக்கொண்டே பூமியை நோக்கி தலைகீழாக வந்து கொண்டிருந்தான். அதனைக் கண்ட விசுவாமித்திரர் ஆத்திரமடைந்து நில் என்றார். திரிசங்கு அந்தரத்தில் நின்றான். முனிவர் தனது தவ வலிமையால் திரிசங்குவிற்குத் தனியாக ஒரு சொர்க்கத்தைப் படைத்துத் தந்தார்.
இப்போதும் இருபக்கமும் இல்லாமல் நடுவே தத்தளிப்பவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக்கொண்டான், என்று கூறுவதை நாம் கேட்கலாம்.


No comments: