திரிசங்கு, சொர்க்கம் சென்ற பிறகு அரிச்சந்திர
மன்னன் அயோத்தியை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தான். எல்லாச் சிறப்புகளையும் பெற்றபோதிலும்
ஒரே ஒரு குறை மன்னனை வாட்டி வதைத்தது. அது தனக்கு ஒரு மைந்தன் பிறக்கவில்லையே என்ற
கவலை தான்.
அரிச்சந்திரன் தன் கவலையை குலகுருவான வசிஷ்ட
முனிவரிடம் தெரிவித்தான். அதற்கு முனிவர், அரிச்சந்திரா, கவலையை விடு, தொடர்ந்து வருண
பகவானை வழிபட்டு வா, அவர் உன் விருப்பத்தை நிறைவேற்றுவார். என்று கூறினார்.
வசிஷ்ட முனிவர் கூறியபடி மன்னன் வருண பகவானான
இந்திரனை வழிபாடு செய்து வந்தான். மன்னனின் பக்தியை கண்டு மகிழ்ந்த இந்திரன் அவன் முன்
காட்சியளித்தான். அரிச்சந்திரா! உன் வழிபாட்டில் மிகவும் மகிழ்ந்தேன். நீ வேண்டும் வரம்
யாது? என்று கேட்டான்.
தேவேந்திரா, எனக்குப் புத்திரன் இல்லாத குறை
தீர அருள்புரிய வேண்டும் என்று வேண்டினான் அரிச்சந்திரன். மன்னனே உன் விருப்பம் நிறைவேறும்.
ஆனால் ஒரு நிபந்தனை, என்றான் இந்திரன். சொல்லுங்கள் தேவா, என்று பணிவோடு வினவினான்
மன்னன்.
உனக்கு மகன் பிறந்த பிறகு அவனை யாகப்பசுவாக
வைத்து ஒரு நர வேள்வி செய்ய வேண்டும் என்று இந்திரன் கூறினான். மைந்தன் பிறந்தால் போதும்
என்ற ஆர்வத்தில் மன்னன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். உனக்குப் புதல்வன் பிறப்பான்,
என்று கூறிவிட்டு வருண தேவன் மறைந்தான்.
வருண தேவன் வாக்குப்படி சந்திரமதி கர்ப்பமுற்றாள்.
ஒரு நன்னாளிலே அழகே வடிவான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அளவற்ற மகிழ்ச்சியடைந்த அரிச்சந்திரன்
ஏராளமான தான தருமங்கள் செய்தான். நாடே விழாக்கோலம் பூண்டது. தவப்புதல்வனுக்கு லோகிதாசன்
என்று பெயர் சூட்டப்பட்டது.
குழந்தையை அரிச்சந்திரனும் சந்திரமதியும்
சீராட்டி மிகவும் பாசமுடன் வளர்த்து வந்தனர். லோகிதாசனுக்கு ஐந்து வயது ஆனதும் வருணதேவன்
அங்கே வந்தான். 'அரிச்சந்திரா, நீ சொன்ன வாக்கின் படி உன் மகனை யாகப் பசுவாக வைத்து
நர யாகம் செய்' என்றான்.
இதனைக் கேட்டு மன்னன் அளவற்ற துயரம் அடைந்தான்.
வருணதேவனிடம், தேவா தங்களுக்குத் தந்த வாக்கின்படி நர யாகம் செய்கிறேன். ஆனால், என்
மகன் மிகவும் சின்னஞ் சிறுவனாக இருக்கிறான்.
அவனோடு கொஞ்சி விளையாட வாய்ப்புக் கொடுங்கள்.
சிலகாலம் கழித்து நர யாகம் செய்து விடுகிறேன், என்று வேண்டி நின்றான். அதனை ஏற்றுக்கொண்ட வருணன் மீண்டும் வருவதாகக்
கூறிச் சென்றான்.
தக்க வயது வந்ததும் லோகிதாசனுக்கு குருகுலக்
கல்வி கற்க மன்னன் ஏற்ப்பாடு செய்தான். லோகிதாசன் குருவிடம் கல்வியும், போர்ப் பயிற்சியும்
கற்க ஆரம்பித்தான். பெற்றோர் தங்கள் மைந்தனின் அறிவாற்றல் கண்டு வியந்து மகிழ்ந்து
வந்தனர்.
லோகிதாசனுக்கு பத்து வயது ஆன சமயம் வருண தேவன்
மீண்டும் வந்தான்.
அரிச்சந்திரனே, நீ கேட்டபடி போதிய அவகாசம்
தந்துவிட்டேன். உடனே யாகத்தைச் செய்து முடி, என்றான். பதில் சொல்ல முடியாமல் மன்னன்
பிள்ளைப் பாசத்தால் தவித்தான். என்ன செய்வது என்று தெரியாமல் நிலை தடுமாறினான்.
வருணதேவனை வணங்கி, தேவனே! என் மைந்தனுக்கு
'உபநயனம்' செய்து பார்க்க மிகவும் ஆசைப்படுகிறேன். உபநயனம் ஆகாமல் யாகப் பசுவாகத் தகுதி
இல்லையாம். பதினொன்றாம் வயதில் உபநயனம் செய்யும் வரை தாங்கள் பொருத்தருள வேண்டும்.
அதன் பிறகு யாகத்தை செய்து விடுகிறேன். என்று வேண்டினான்.
'மன்னா! நான் வரும்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு
காரணத்தைக் கூறிச் சமாளித்து வருகிறாய். உபநயனம் முடியும் வரை காத்திருப்பேன். அதன்
பிறகும் எந்தக் காரணத்தையும் சொல்லி நழுவ முயற்சிக்காமல் யாகத்தைச் செய்து முடி' என்று
கூறிவிட்டு வருணன் மறைந்தான்.


